டியாகோ கார்சியா மீது ஏவுகணைகள் வீசியது ஈரான்: பொறுப்பற்ற செயல் என்கிறது பிரித்தானியா
ஈரானிய அச்சுறுத்தல்களுக்கு எதிராக இங்கிலாந்து தொடர்ந்து தற்காப்பு ஆதரவை வழங்கும் என்று வெளியுறவுச் செயலாளர் கூறியுள்ளார். ஆனால் மத்திய கிழக்கில் ஒரு பரந்த மோதலில் அது ஈடுபடுத்தப்படாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சாகோஸ் தீவுகளில் உள்ள அமெரிக்க-பிரிட்டிஷ் கூட்டு இராணுவத் தளத்தை தெஹ்ரான் குறிவைத்ததாகவும், டியாகோ கார்சியா தீவை நோக்கி இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, இவெட் கூப்பர் பேசினார்.
பிரித்தானியாவின் நலன்களை ஆதரிப்பதில், பாலிஸ்டிக் ஏவுகணை அச்சுறுத்தல்களுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அடங்கும் என்று அவர் மேலும் கூறினார்.
சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு ஈரான் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களையும், நமது வளைகுடா கூட்டாளிகளுக்கு ஈரானால் ஏற்படுத்தும் அச்சுறுத்தல்களை புரிந்துகொண்ட பிரித்தானரியா இந்த மோதலுக்கு விரைவான முடிவு காண விரும்புவதாகவும் கூப்பர் மீண்டும் வலியுறுத்தினார்.
பெயர் குறிப்பிடப்படாத அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி, டியாகோ கார்சியா மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னலும் சிஎன்என்-னும் செய்தி வெளியிட்டன , ஆனால் அந்த இரண்டு ஆயுதங்களும் தங்கள் இலக்கை அடையவில்லை என்றும் கூறின. அவை எப்போது ஏவப்பட்டன என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்தைக் குறிவைக்கும் ஈரானிய தளங்களைத் தாக்க, அமெரிக்கா தனது பிரிட்டிஷ் இராணுவத் தளங்களைப் பயன்படுத்த இங்கிலாந்து ஒப்புக்கொள்வதற்கு முன்பே இது நடந்ததாக நம்பப்படுகிறது.
ஏவப்பட்ட ஏவுகணைகளில் ஒன்று பறக்கும்போதே செயலிழந்ததாகவும், மற்றொன்று அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்றால் இடைமறிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஈரானிலிருந்து சுமார் 2,350 மைல் தொலைவில் உள்ள டியாகோ கார்சியாவைச் சென்றடையும் திறன் கொண்ட ஏவுகணைகள் ஈரானிடம் உள்ளதா என்பது குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க ராணுவம் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது.

Post a Comment